Sunday, September 28, 2008

அவ்வளவு நல்லவரா நீங்க??

அலுவலகத் தோழர் ஒருவருக்கு ஜீன் மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சில நாட்கள் கழித்து, எங்கள் அலுவலகத்துக்கு வழக்கமான, வருடாந்தர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவக்குழு ஒன்று வந்தது. இரத்தம் முதல் இதயம் வரை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.
சென்ற வருடம் போலவே இந்த வருடமும், எல்லோருடைய சோதனைமுடிவுகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆம் எல்லாருக்கும் கொழுப்பு ஏறி இருந்தது. "கொலஸ்ட்ரால கன்ட்ரோல் பண்றதுக்கு, எக்சசைஸ் பண்ணுங்க, பழங்கள் நிறைய சாப்பிடுங்க, எண்ணைப் பலகாரங்கள் சாப்பிடாதீங்க" அப்டின்னு டாக்டர்கிட்டயிருந்து ஏகப்பட்ட அட்வைஸ்.

பெரும்பாலானோர் தலைய ஆட்டிட்டு ஜாலியா வந்துட்டோம். ஆனா அந்த கல்யாண மாப்பிள்ளை மட்டும் ரொம்ப கவலையா இருந்தாரு. ஏன்யா என்னாச்சுன்னு விசாரிச்ச்ப்போ, சுகர் லெவல் பார்டரில் இருப்பதாகவும், கவனமாக இருக்கவேண்டும் என்று டாக்டர் சொன்னதாக சொன்னார்.

அவருடைய ரிப்போர்ட்டை பார்த்தபோது , எல்லாம் நார்மலாகவே இருந்தது. சர்க்கரை அளவு மட்டும் சற்று அதிகமாக இருந்தது. எறக்குறைய எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது. "அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. சாப்பாடு, தூக்கம் இதெல்லாம் சரி இல்லாததால இந்தமாதிரிதான் இருக்கும், கல்யாணமான எல்லாம் சரியாய் போயிடும்" என்று எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தோம். ஆனால் அவர் ஒன்றும் கேட்பதாயில்லை.

" நான் வீட்டுக்கு போன் பண்ணி கல்யாணத்த வேண்டாம்னு சொல்லிரேன். பாவம் அந்த பொண்ணு, அதோட வாழ்க்கையும் வீணாபோயிரும் " அப்புடின்னு வாழ்வே மாயம் கமல் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டார். அன்று இரவே அவருடைய பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் முதலில் சற்று அதிர்ந்தாலும், சுதாரித்துக்கொண்ட அவருடைய அப்பா, உடனே கிளம்பி வருவதாகவும், மனதை குழப்பிக்கொள்ள வேண்டாமென்றும் ஆறுதல் சொல்லிவிட்டு, அடுத்தநாள் இங்கு வந்து சேர்ந்தார்.

மாப்பிள்ளை இன்னும் சோகத்தில்தான் இருந்தார். அவருடைய அப்பா வந்து சில விவரங்களை சொன்னார்," இதோ பாருப்பா, நம்ம வீட்டுல எனக்கோ, உங்க அம்மாவுக்கோ சுகர் கிடையாது. அதுனால ஜீன் வழியா உனக்கு வர்த்துக்கு வாய்ப்பில்லை. உனக்கு சர்க்கரையளவு இப்போ பார்டரில்தான் இருக்கு. அதனால் இது ஒரு எச்சரிக்கைதான். இனிமே எக்சசைஸ், யோகா இதெல்லாம் பண்ணி, ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டா ஒரு பிரச்சினையும் இருக்காது." இதன்பிறகே அவருடைய முகத்தில் சற்று தெளிவு பிறந்தது.
அன்று சாயங்காலமே அவர் போய் யோகா கிளாஸில் சேர்ந்தார். காலையில் வாக்கிங், ரன்னிங், சாயங்காலம் யோகா அப்புடின்னு பயங்கர பிசியாயிட்டாப்புள.. சோறு, சோறுன்னு அலையாம, சப்பாத்தி, ஓட்ஸ் ன்னு பயங்கர மார்டனா மாறிட்டாரு.
மூன்று மாதத்தில 6 கிலோ எடையை குறைச்சி, இப்போ நல்லா சுறுசுறுப்பாயிட்டாரு. எப்புடி இருந்த மோகன் இப்படி ஆயிட்டாரே? ன்னு நாங்க ஆச்சர்யமா பார்க்கிறோம். அக்டோபர் மாதம் அவருக்கு திருமண நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. இப்பவெல்லாம், மணமகனும், மணமகளும் செல்பேசியில் குறைந்தது 1 மணி நேரமாவது பேசுகிறார்கள்.. நல்லாயிருங்க மணமக்களே......

அவரிடம் நாங்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி..... அவ்வளவு நல்லவரா நீங்க???

Wednesday, September 24, 2008

வாழ்த்துக்கள்

வலையுலகத்திற்கு என் அன்பான வணக்கங்கள். காணமல் போன பேனாவை கண்டுபிடிப்பதற்குள் மூன்று மாதங்கள் கரைந்துவிட்டன. இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகள். அதில் முக்கியமானது,
செப்டம்பர் 11 அன்று பங்குச்சந்தை நிபுனரான திரு.மங்களூர் சிவா, பூங்கொடி என்ற நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் தன்வசமாக்கிக்கொண்டார். வாழ்த்துக்கள் சிவா சார்.
தனியா இருந்த போது ஊர், ஊரா போய், வேண்டியவங்க, வேண்டாதவங்கன்னு பாரப்ட்சம் பார்க்காமல், பஜ்ஜியும், சொஜ்ஜியும் தின்னுட்டு வந்த நீங்க, அதேமாதிரி இனிமே எங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பீங்கன்னு நம்புகிறேன்.

நீங்க காலை, மதியம் மற்றும் இரவு வேலைகளில் மட்டும் சமைப்பதாகவும், சமையல் மணம் சுற்றியுள்ள தெருக்களில் பரவுவதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.. உண்மையா சிவா சார்...

உங்கள் இருவரின் இல்லறமும் சிறக்க மீண்டும் என் நல்வாழ்த்துக்கள்....