Tuesday, October 30, 2007

கடவுளின் சொந்த நாடு - 1

கடவுளின்ட சொந்தநாடு என்ட கேரளா' கொஞ்சம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நாம் சொல்வது போல், கேரளாவை கடவுளின் சொந்த நாடு என்கிறார்கள்.

நான் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவனந்தபுரத்துக்கு வந்தேன். கூட வேலை பார்கிற மலையாள நண்பர்களுடன் பேசி, சீக்கிரமே மலையாளம் கத்துக்கலாம்னு நினைச்சேன் ஆனா நடந்ததென்னவோ அவர்களெல்லாம் என்னிடம் பேசி ரொம்ப சீக்கிரமே தமிழ் கத்துகிட்டாங்க.

திருவனந்தபுரம்தான் கேரளாவோட தலைநகரம் னு சொல்லிகிறாங்க, ஆனா அதுக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். தம்பானூர் என்ற




இடத்தில்தான் பேருந்து நிலையமும், இரெயில் நிலையமும் இருக்கின்றன. மழை நேரத்துல இந்த இடத்துக்கு வரனும்னா படகுலதான் வரனும். அவ்வளவு பள்ளமான இடம். ஆன இங்க எவ்வளவுதான் மழை பெய்தாலும் கொஞ்சநேரத்திலேயே தண்ணியெல்லாம் ஓடிடும்.

இங்க ஓடுற பேருந்துகளை பார்த்ததுக்கப்புறம்தான் தமிழ்நாட்டுப் பேருந்துகளோட அருமையே புரிஞ்சுது. தலைநகரத்தோட பேருந்து நிலையத்த பார்த்தீங்கன்னா, மீன் மார்கெட் மாதிரியே இருக்கும், அவ்வளவு (அ)சுத்தமாகவும், சத்தமாகவும் இருக்கும்.


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இங்க இருக்குற எல்லாருக்கும் கொஞ்சம் கொழுப்பு அதிகம். ஆமாங்க சமையலுக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்துறதால கொழுப்பு சேர்ந்துகிட்டே இருக்கு. வந்த புதுசுல கேரளா அரிசியை நினைச்சால பயமா இருந்தது, ஆனா இப்பெல்லாம் சாதரண அரிசி சாதம் எல்லா இடத்துலேயும் கிடைக்குது.


என்னடா இவன் ஒரே குறையா சொல்லிகிட்டு இருக்கானேன்னு நினைக்கிறீங்களா? .. அடுத்த பதிவில் இங்க இருக்குற நல்ல விஷயங்களை பத்தி சொல்லப்போறேன்.

Monday, October 29, 2007

அறிமுகம்

என்னைப்பற்றி எந்தவித அறிமுகமும் கொடுக்காமல் ஏனோதானோ என்றுதான் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் இப்போதுதான் இதன் முக்கியத்துவமும் , வலிமையும் எனக்கு புரிகின்றன.

எனது சொந்தவூர் வேளாங்கண்ணி. தற்போது திருவனந்தபுரத்தில் , ஒரு ஆங்கில பத்திரிக்கையின் தொழில்நுட்ப பிரிவில் வேலைப் பார்கிறேன், இவ்வளவுதாங்க நான்.

வலைப்பதிவுகளை எனக்கு அறிமுகம் செய்த விஜய் அவர்களுக்கும், இதை மேன்படுத்துவதற்கு உதவிய மங்களூர் சிவா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்தனையோ சுவையான செய்திகள், காரசாரமான விவாதங்கள் இத்தகைய வலைப்பதிவுகளில் உலா வருகின்றன. என்னுடைய எண்ணங்களை உங்கள்முன் எதிரொலிக்க இந்தக்கண்ணாடியைப் நான் பயன்படுத்தப்போகிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து முகம் காட்டிச்செல்லுங்கள். அப்படியே என்னையும் கூட்டிச்செல்லுங்கள் உங்கள் வலைப்பயணங்களில்......

நேசமுடன்,

அ.ரூபஸ். (சத்தியமா நான் தமிழ்நாடுதான்)

Friday, October 19, 2007

தொல்லை பேசி



முன் பெஞ்சில் அமர்ந்திருக்கிற நண்பனுக்கு குறுந்தகவலோ, தூரத்தில் இருக்கும் தோழிக்கு புதுப்பாடலின் இசையையோ இனி பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்ப இயலாது.




பள்ளிக்கூடங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் செல் பேசியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.


தலைக்கவசம் அணிய வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து, குட்டையாக குழப்பினார்களே அதுபோல் இல்லாமல், கொஞ்சம் கடுமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தால் நலமாயிருக்கும்.

Sunday, October 14, 2007

உறக்கமும், சோம்பலும்

தூக்கம் என்பது கண்களின் தர்மம்
ஆனால் சோம்பல் என்பது ஒருவகையான தற்கொலை

தூக்கத்தில் சொறிந்து கொள்வது மாதிரி
சோம்பலென்பது ஒரு தற்காலிக சுகம்,

விழித்துப் பார்த்தால் அதுவே ரத்தம் கசியும்
ரணமாகவும வாய்ப்பிருக்கிறது,

நேரத்தை ஒத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிஷத்திலும்
உனது வெற்றி ஒத்திவைக்கப்படுகிறது

நாளை என்று தள்ளிப்போடும் நாளெல்லாம் உன் எதிர்காலம்
இறந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது.

-கவிஞர் வைரமுத்து
("சிற்பியே உன்னை செதுக்குகிறேன்")

Monday, October 1, 2007

காகங்களின் வருத்தம்


மாலைகளுடன் மனிதர்களின் கூட்டம்
காகங்கள் வருந்துகின்றன..
இன்று காந்தியிடம நெருங்க முடியாதென்பதால்...

காந்தி பிறந்தநாள்


அக்டோபர் இரண்டு மகாத்மாவின் பிறந்தநாள். குடிமக்கள் கொண்டாடுகிறார்கள், குடிமகன்கள் திண்டாடுகிறார்கள் மதுக்கடை கட்டாய விடுமுறை என்பதால். அது போகட்டும்.. என்னைக்கவர்ந்த காந்தியின் பொன்மொழிகளில் சில உங்கள் பார்வைக்காக இதோ...


  • Freedom is not worth having if it does not include the freedom to make mistakes .
  • Hate the sin, love the sinner
  • I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent
  • An eye for an eye makes the whole world blind
  • You must not lose faith in humanity. Humanity is an ocean, if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.
  • The weak can never forgive. Forgiveness is the attribute of the strong