Sunday, June 1, 2008

சின்ன விஷயம் ஆனா பெரிய சந்தோஷம்..

இரவு நேரத்தில் பேருந்தின் முன்னிருக்கைகளில் அமர்ந்து, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அடிமனதில் ஒரு சிறிய பயம் இருக்கும். கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தோடு வேகமாய் எதிர்வரும் வாகனங்கள், குறைந்த இடைவெளியில் கடந்துபோகும் மகிழ்வுந்துகள், வளைவுகளில் முந்திச்செல்லும் இருச்சக்கரங்கள் என இவையேல்லாம் ஒன்றுசேர்ந்து லேசான பயத்தை உண்டாக்கிவிடும். அந்த சமயங்களில் ஓட்டுநரைப்பற்றி அதிகம் சிந்திப்பதுண்டு. காலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனா ஏனோ இன்றுவரை யாருக்கும் சொன்னதில்லை.




அன்று, வேளை நகரிலிருந்து , திருவனந்தபுரம் நோக்கி பேருந்தில் என் பயணத்தை தோடங்கினேன். மே மாதம் என்பதால் பேருந்து நிரம்பியிருந்தது. இரவு 2 மணியளவில் பேருந்தின் பின்பக்கம் பெரிய சத்தம் கேட்டது. கண்களை திறப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு தூக்கத்தை கலைத்தேன். "பஞ்சர்" என்றார் டிரைவர். சற்றுத்தொலைவில் ஒரு மெக்கானிக் ஷாப் இருப்பதாக ஒரு லாரி டிரைவர் சொன்னார். எல்லாரையும் இறக்கிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு போனார்கள்.

விளக்கு எரிந்துகொண்டிருந்தாலும் , கடையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். "காசு கம்மியா கிடைக்கும் ங்குறதால அரசாங்க பஸ்சுக்கெல்லாம் பஞ்சர் ஒட்ட மாட்டார்கள். வேற பஸ் பாக்க வேண்டியதுதான்" என்று சலித்துக்கொண்டார் சகபயணி ஒருவர். குரல்கேட்டு இருவர் எழுந்தனர். டிரைவர் விஷயத்தை சொன்னதும் உடனே உள்ளே சென்று ஜாக்கி யை எடுத்துக்கொண்டு வந்தனர். கிடுகிடுவென வேலையை ஆரம்பித்தார்கள். ஸ்டெப்னி டயரைப் பார்த்தபோது வழுவழுவென டைல்ஸ் தரை மாதிரி இருந்தது. ஒரு நாற்பது நிமிடங்களில் வேலையை
முடித்துவிட்டனர்.


அப்பாடா என்று பெருமூச்சுவிட்டபடி எல்லோரும் அடித்து பிடித்து பெருந்தில் ஏறினோம். என் அருகில் அமர்ந்திருந்தவர் மட்டும் ஏறவில்லை. அவர் அந்த மெக்கானிக்குகளுடன் பேசிக்கொண்டிருந்தார். கடைசியில் அந்த இருவரின் சட்டைப்பையிலும் ஏதோ ஒரு சிறியத்தோகையை திணித்துவிட்டு, கைகுலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் அழுக்காய் இருந்ததால் அவர்கள் தயங்கினர் , விடாமல் இவர் கைகுலுக்கிவிட்டு வண்டியில் ஏறினார். அவர்களும் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்.


அருகில் அமர்ந்தபிறகு கையில் ஒட்டியிருந்த மசையை ஜன்னல் வழியாக கழுவினார். நான் ஆச்சர்யமுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவராகவே பேச ஆரம்பித்தார், " அது ஒன்னுமில்ல தம்பி, இந்த ராத்திரி நேரத்துல ரொம்ப கஷ்டப்பட்டு பஞ்சர் ஒட்டினாங்க. அவுங்க மட்டும் இல்லைனா நம்ம நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும். அதுனாலதான் அவுங்களுக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன்" என்றார். "ச்சே.. நம்மகூட ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாமே" என்று நினைத்துக்கொண்டேன்.


இடையில் ஒருமணிநேரம் தடைப்பட்டாலும் சரியான நேரத்திற்கு நாகர்கோவில் வந்து சேர்ந்தது பேருந்து. எல்லோரும் கீழே இறங்கிகொண்டிருந்தோம். என் அருகில் அமர்ந்திருந்தவ்ர் இறங்குவதற்கு முன், என்னிடம் விடைப்பெற்றுக்கொண்டு ஓட்டுநரிடம் சென்றார். ஓட்டுநருக்கு கைகொடுத்து, பத்திரமாய் கொண்டுவந்து சேர்த்ததற்காக நன்றி தெரிவித்தார். அவருக்கு பின் இறங்கிய நான் சொல்லலாமா என்று யோசித்தப்படியே நடக்கத் தொடங்கினேன். ஆனால் சொல்லவில்லை சற்றுதூரம் சென்று பின் மீண்டும் திரும்பி வந்து அந்த ஒட்டுநருக்கு நன்றி தெரிவித்தேன். அவரும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். என் அருகில் அமர்ந்து பயணித்தவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் அதற்குள் அவர் கூட்டத்தில் கலந்து காணாமல் போயிருந்தார்.


பின்குறிப்பு: "சரியான ரம்பம்" அப்புடின்னு நீங்க திட்றது என் காதுல விழுது. மேட்டர் என்னன்னா , நல்ல விஷயங்கள பார்க்கும்போது வாய்திறந்து பாராட்டுங்க. அவ்வளவுதான்..... ..