Sunday, January 20, 2008

தயக்கம்

"வாங்க வாங்க" என்று சிவாவை புன்னகையுடன் வரவேற்றாள் மலர்.

"அப்பா குளிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உட்காருங்க" என்று நாற்காலியை நகர்த்திக்கொடுத்தாள். இருவரும் அவரவர் வேலைகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
"ஒரு நிமிஷம். நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மலர்.
குளித்துவிட்டு வந்த கணேசன், "என்ன சொல்லிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தார்.
"இன்னும் சொல்லல சார். இந்தாங்க இந்த மாத வாடகை " என்று நீட்டீனான்.

"ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. எப்போதான் சொல்லப்போறீங்க?"என்று கோபப்பட,
"ஏம்பா அவரை திட்ரீங்க" என்று சப்போட்டுக்கு வந்தாள் மலர்.

"அது ஒன்னுமில்லைமா எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன டிலீங் இருக்கு அதபத்திதான் கேட்டுக்கிட்டு இருந்தேன்" என்று சாமாளித்தார் கணேசன்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான் சிவா.

"நேர்ல முடியலைன்னா போன்லையாவது சொல்லித்தொலைங்க" என்று அலுத்துக்கொண்டார் கணேசன்.

சமையலறையிலிருந்து மனைவி கமலா அழைக்க , உள்ளே சென்றார் கணேசன்.

"என்னங்க சொல்லிட்டாராமா?" என்று ஆவலுடன் கேட்டார்.

"ஆமா மண்ணாங்கட்டி" சூடானார் கணேசன்.

"ஏன் இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு கொஞ்சம் தயக்கம் அதிகம்" இது கமலாவின் சமாதானம்.

"பின்ன என்னடி, நம்ம பொண்ண லவ் பண்றேன்னு நம்மகிட்ட சொல்லியே 6 மாசம் ஆகிடுச்சு. நம்மளும் சரின்னு சொல்லிட்டோம், அவுங்க வீட்டுலயும் சரின்னுட்டாங்க. ஆனாலும் நான்தான் என் காதல மலர்கிட்ட சொல்லுவேன்னு அடம்பிடிச்சவரு, இன்னும் சொல்லாம காலத்த கடத்தினா நாம என்னதான் பண்றது".

"சரி சரி விடுங்க. நீங்ககூடதான் ரெண்டு வருஷம் என்கிட்ட சொல்ரத்துக்கு பயந்தீங்க. ." என்று கமலா சிரிக்க , கணேசனுக்கு வெட்கம் படர்ந்தது முகத்தில்.

Monday, January 14, 2008

பொங்கலோ .. பொங்கல்..

"பொங்கல் பொங்கி வழியும் காட்சியோடு..பொங்கல் தினச்சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ... என்று சொல்லும்போது அடுத்தச்சேனலுக்கு மாற்றிவிடுகிறார் நண்பர். இப்படி ஒவ்வொரு சேனலாக பார்த்துமுடிப்பதற்குள் இரவு வந்துவிட்டது.. பிறகு என்ன வழக்கம்போல் தூக்கம்தான்.."

ச்சே .. கனவுகூட தூங்குறமாதிரியே வருது.. ஆமாங்க மேல இருக்குறது நாளைக்கு நடக்கப்போகும் விஷயங்கள். எங்கள் அலுவலகத்தில் எல்லோருக்கும் சேர்ந்தார்போல் விடுமுறை கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் தூங்கியே பொழுதை கழித்துவிடுவோம்..


ஆனா பொங்கல் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம்.. நாளைக்கு நாகர்கோவில் அருகில் உள்ள பத்மநாபா அரண்மனையையும் , சுற்றியுள்ள அருவிகளையும் பார்க்கப்போகிறோம்.

மக்களே!!! நீங்களும் சின்னத்திரையில சிக்கிடாம நல்லபடியா பொங்கலை மனிதர்களோடும், கால்நடைகளோடும் கொண்டாடுங்க.. கரும்பு மற்றும் காய்கரிகளை நிறைய வாங்கி, விவசாயிகளுக்கு உதவி செய்யுங்க.. ஊருக்கு வந்திருக்கிற நண்பர்களை பார்த்து நலம் விசாரிங்க.. கோவில்களுக்கு போங்க..
தைமகளின் வருகை, அனைவருக்கும் இனிப்பையும் , இன்பத்தையும் கொண்டுவரட்டும்..
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...




Saturday, January 12, 2008

புத்தாண்டு சபதம்

எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பத்து நாள் நான் ஊருக்கு போயிருந்தேன். ஊரில், ஒருநாள் என் மின்னஞ்சல் பெட்டியை பிரிக்கும்போது புத்தாண்டு சபதம் என்ற பெயரில் மங்களூர் சிவா (மாமா...ஆமா...ஆமா) ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். நானும் ஏதாவது ஜொள்ளு படமா இருக்கும்னு ஆசையா திறந்தேன். ஆனா புத்தாண்டு சபதம் எழுதுன்னு அன்புக்கட்டளை பிறப்பிச்சிருந்தார். என்னையும் மதிச்சு கேட்டதால இதோ எனது புத்தாண்டு சபதங்கள்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( சென்ற வருட அனுபவம்).

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மென்மேலும் உயரவேண்டும்.

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மங்களுர் மாமா படிச்சிட்டு பாராட்டுவார் ங்குற நம்பிக்கைதான்..)

4. படிப்பதற்கு சிரமப்படும் சகோதர, சகோதரிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

5. சென்றவருடம் செய்த தவறுகளை இந்த வருடம் செய்யக்கூடாது. புதிது புதிதாக ஏதாவது தவறு செய்ய வேண்டும்.

புதிதாக புத்தாண்டு சபதம் எழுத நான் அழைக்கும் நண்பர்கள்..

1 தொடுவானம் நம் உள்ளத்தில் (தீபா கோவிந்த்)

2. காலம் ( கோவிக்கண்ணன்)

3. குட்டிப்பிசாசு

4. பாலைத்திணை ( காயத்ரி)

எழுதப்போகும் நண்பர்களுக்கு முன்கூட்டியே எனது நன்றிகள்...