Monday, March 31, 2008

கைத்தொழில்

நான் பள்ளியில் படிக்கும்போதேல்லாம் வாரம் இருமுறை கைத்தொழிலுக்கென்று தனி வகுப்புகள் நடத்தப்படும். கூடைப்பின்னுதல், பூ வேலைப்பாடு போன்றவற்றைக் கற்றுத்தருவார்கள். இப்போது எத்தனை பள்ளிகளில் அந்த வகுப்பு உள்ளது என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு பள்ளிக்குச்செல்லும் வாய்ப்புக்கிடைத்தது.

வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் என்ற ஊர் உள்ளது. சுனாமி வந்து "விசாரித்துவிட்டுப்போன " பகுதிகளில் அதுவும் ஒன்று. அந்த ஊரில் புனித மைக்கேல் நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் , பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள்.

மணி அடித்தவுடன் , முண்டியடித்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே, இந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சற்று வித்யாசப்படுகிறார்கள். பள்ளி முடிந்ததும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் ஒரு அருமையான கைத்தொழிலை மாணவர்கள் ஆர்வமுடன் செய்கின்றனர்.நீங்கள் பார்க்கும் படங்கள், அவர்களின் கைவண்ணத்தில் உருவான வண்ண உறைகள் (covers) . உங்களைப்போலவே ஆச்சர்யப்பட்ட நானும், ஆசிரியர்களிடம் இதைப்பற்றி விசாரித்தேன். மிகவும் எளிய முறையில் இதை தயாரிக்கிறார்கள்.

முதலில், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களை நீருடன் கலந்து ஒரு வாளியில் எடுத்துக்கொள்கின்றனர். பின் மூன்று வாளிகளில் சுத்தமான நீரை நிரப்பிக்கொள்கின்றனர். இங்க்பில்லர் உதவியுடன் வண்ணங்களை எடுத்து சொட்டு சொட்டாக நீர் மட்டும் உள்ள வாளிகளில் விடுகின்றனர். அந்த வண்ணங்கள் நீருக்குள் பரவும்போது , லேசாக ஊதி விடுகின்றனர். பின் சாதாரண வெள்ளை நிற உறைகளை எடுத்து, அந்த நீருள்ள வாளிகளில் அமிழ்த்தி வெளியே எடுக்கும்போது விதவிதமான, அழகழகான வண்ணங்கள் தோன்றுகின்றன. பின் வண்ண உறைகளை காற்றில் உலர்த்துகின்றனர்.

விளையாட்டுப்போல இருப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் இதில் பங்கு கொள்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் சுனாமிப் பேரலையில் தங்கள் உறவுகளையும் , உடைமைகளையும் இழந்தவர்கள். மாந்தோப்புகளிலும், முந்திரிக்காடுகளிலும் அலைந்து திரிந்த இச்சிறார்களை, பள்ளிக்கு கொண்டுவந்து படிப்பின் மகத்துவத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த பள்ளி ஆசிரியர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த கவர்களை நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். முக்கியமாக விழாக்களில் பயன்படுத்தலாம். இந்த உறைகளின் விற்பனையின் மூலம் கிடைக்கும் செல்வம் இந்த மாணவச்செல்வங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது.

வலைப்பூ நண்பர்கள் இதை வாங்க விரும்பினால், அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்புக்கொள்ளலாம். அவரின் மின்னஞ்சல் முகவரி kaviraj94@rediffmail.com .

நம் வீடு மற்றும் அலுவலக விழாக்கள் , இந்த மாணாக்கரின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் திகழட்டும்.


Saturday, March 22, 2008

நேற்று பெய்த மழையில்..

வணக்கம் மக்களே! தலைப்பை பார்த்துட்டு ஏதோ மெகா சீரியல்னு நினைக்காதீங்க.. சரி விஷயத்துக்கு போவோம்.
நேற்று இரவு ஷிப்ட் முடிந்ததும் வெளில வந்து பார்த்தா ஒரே மழை. ரெயின் கோட்டை மாட்டிகிட்டு, வண்டியை எடுத்தேன். திருவனந்தபுரத்த பொருத்தவரைக்கும் 9 மணிக்கெல்லாம் ஊர் அடங்கிடும், 12 மணிக்கு ரொட்டுல ஒரு ஈ, காக்கா இல்ல. மழை சத்தத்துல என் வண்டி சத்தம்கூட எனக்கு கேட்கல.
"ச்சே , என்ன வேலைடா இது, நேரத்துக்கு சாப்பிடமுடியல, நேரத்துக்கு தூங்கமுடியல, இன்னைக்கு புனித வெள்ளி, இன்னைக்குகூட லீவு இல்ல " என்று அலுத்துக்கொண்டு, குழம்பிய மனத்தோடு, மெதுவாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.
எனக்கு முன் சைக்கிளில் ஒருவர் முழுதும் நனைந்தபடி சென்றுகொண்டிருந்தார். சைக்கிளின் பின்புறத்தில் நனையாதபடி சினிமா போஸ்டர்கள் பாலீத்தீன் கவரில் வைக்கப்பட்டிருந்தன. சுவர் தென்படும் இடங்களிலெல்லாம் சைக்கிளை நிறுத்தி, பொறுமையாக பசைத்தடவி ஒட்டிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி, "கொஞ்சம் மழை விட்டபிறகு ஒட்டலாம்ல்ல " என்று கேட்டேன். "இல்ல தம்பி இன்னும் நிறைய இடத்துல ஒட்ட வேண்டியிருக்கு, சனி, ஞாயிறு லீவு நாளு, அந்த நேரத்துலதான் தியேட்டருக்கு கூட்டம் வரும். அதனால விடியுறத்துக்குள்ள இதெல்லாம் ஒட்டனும்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை நகர்த்தினார்.
அவர் சென்ற திசையை சற்றுநேரம் பார்த்துவிட்டு, நானும் நகரத்தொடங்கினேன் தெளிந்த மனத்தோடு.