Saturday, March 22, 2008

நேற்று பெய்த மழையில்..

வணக்கம் மக்களே! தலைப்பை பார்த்துட்டு ஏதோ மெகா சீரியல்னு நினைக்காதீங்க.. சரி விஷயத்துக்கு போவோம்.
நேற்று இரவு ஷிப்ட் முடிந்ததும் வெளில வந்து பார்த்தா ஒரே மழை. ரெயின் கோட்டை மாட்டிகிட்டு, வண்டியை எடுத்தேன். திருவனந்தபுரத்த பொருத்தவரைக்கும் 9 மணிக்கெல்லாம் ஊர் அடங்கிடும், 12 மணிக்கு ரொட்டுல ஒரு ஈ, காக்கா இல்ல. மழை சத்தத்துல என் வண்டி சத்தம்கூட எனக்கு கேட்கல.
"ச்சே , என்ன வேலைடா இது, நேரத்துக்கு சாப்பிடமுடியல, நேரத்துக்கு தூங்கமுடியல, இன்னைக்கு புனித வெள்ளி, இன்னைக்குகூட லீவு இல்ல " என்று அலுத்துக்கொண்டு, குழம்பிய மனத்தோடு, மெதுவாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.
எனக்கு முன் சைக்கிளில் ஒருவர் முழுதும் நனைந்தபடி சென்றுகொண்டிருந்தார். சைக்கிளின் பின்புறத்தில் நனையாதபடி சினிமா போஸ்டர்கள் பாலீத்தீன் கவரில் வைக்கப்பட்டிருந்தன. சுவர் தென்படும் இடங்களிலெல்லாம் சைக்கிளை நிறுத்தி, பொறுமையாக பசைத்தடவி ஒட்டிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி, "கொஞ்சம் மழை விட்டபிறகு ஒட்டலாம்ல்ல " என்று கேட்டேன். "இல்ல தம்பி இன்னும் நிறைய இடத்துல ஒட்ட வேண்டியிருக்கு, சனி, ஞாயிறு லீவு நாளு, அந்த நேரத்துலதான் தியேட்டருக்கு கூட்டம் வரும். அதனால விடியுறத்துக்குள்ள இதெல்லாம் ஒட்டனும்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை நகர்த்தினார்.
அவர் சென்ற திசையை சற்றுநேரம் பார்த்துவிட்டு, நானும் நகரத்தொடங்கினேன் தெளிந்த மனத்தோடு.