Friday, May 16, 2008

இணைய இல்லறம்

"எப்போ பாத்தாலும் உங்க அப்பா, அம்மா வுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணாதீங்க. நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க"
******************
"கேட்குறீங்க இல்லன்னு சொல்லலை. ஆனா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்ருவீங்க. சம்பளத்தை உங்க அப்பாகிட்ட குடுத்துரீங்க. அதை நான் தப்புன்னு சொல்லலை. ஆனா, நம்ம குழந்தைக்கு ஒரு பால் டப்பா வாங்கனும்னா கூட உங்க அப்பாகிட்டதான் கையேந்த வேண்டியிருக்கு".
******************
"ம்ம். குடுக்குறாரு ஆனா அதுக்குமுன்னாடி ஏன், எதுக்குன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறாரு. சிக்கனமா இருக்க வேண்டியதுதான், ஆனா உங்க அப்பா பண்றது கஞ்சத்தனம்".
***********************
"வயசானவங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, இதையே எத்தனைதடவைதான் சொல்லுவீங்க. என்னோட பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு".
*********************
"நான் ஏன் எங்க அப்பா வீட்டுக்கு போகனும்? , அவுங்க நிம்மதியை கெடுக்கவா?.. என்ன பேச்சு பேசுரீங்க நீங்க?. அப்புறம் என்னத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்டீங்க?"
*********************
"ஆமாங்க நான் பேசுறதெல்லாம் உங்களுக்கு சத்தம் போடுறது மாதிரிதான் இருக்கும். குழந்தைக்காக பாத்துகிட்டுருந்த வேலையையும் விட சொன்னீங்க. இப்ப வீட்டு வேலையையும் பாக்கணும், குழந்தையையும் கவனிக்கனும்னா ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலைக்கு ஒரு ஆளு வைச்சுக்கலாம்னு சொன்னாகூட உங்க அப்பா காதுலையே வாங்கமாட்டேங்குறாரு"
*********************
"ஐயோ! சொல்றத புரிஞ்சுக்குங்க. வேலை செய்யுறத்துக்கு நான் அலுப்பு படலைங்க. குழந்தை தவழ ஆரம்பிச்சுட்டான். ஒவ்வொரு நொடியும் அவனை கவனிச்சுகிட்டே இருக்க வேண்டியிருக்கு. துணி எக்கச்சக்கமா துவைக்க வேண்டியிருக்கு, ஒரு ஆளு துணைக்கு இருந்தா உதவியா இருக்கும்".
*******************
இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?.. நான் பைத்தியம் மாதிரி கத்திகிட்டு இருக்கேன். ஏதாவது பேசுங்க".
*********************
"என்ன செய்யுறதுன்னா?... ஒன்னு நீங்க இங்க வந்து எங்ககூட இருங்க. இல்லைன்னா என்னையும் , குழந்தையையும் உங்ககூட கூட்டிட்டு போயிடுங்க. சரி நேரமாயிடுச்சி குழந்தை முழிச்சுடுவான், போய் சாப்பிட்டு , நல்லா தூங்குங்க, நான் கிளம்புறேன்". என்று வெளிநாட்டில் இருக்கும் கணவனிடம் வெடித்துவிட்டு , Yahoo Messenger ஐ sign out செய்துவிட்டு கிளம்பினார் அந்த இணைய இல்லறத்தின் இல்லத்தரசி.