Saturday, May 30, 2009

எங்களையும் கவனியுங்கள்...

சில தினங்களுக்கு முன்பு பெங்களளூர் நண்பர்களிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வந்தது. முன்பெல்லாம் வாரம் இருமுறை பேசும் நண்பர்கள், இப்போதல்லாம் மாதம் ஒருமுறைக்கூட பேசுவதில்லை . பொருளாதார பின்னடைவுன்னு காரணம் சொல்லி காச மிச்சம் புடிக்கிறானுங்க.. கஞ்சன்ஸ்..
ஏன் நீ பண்ண வேண்டியதுதானே அப்புடின்னு என்னை கேட்குறானுங்க.. நான் என்னங்க பண்றது , கேரளாவுல அவுட் கோயிங் போகாதே!
சரி, விஷயத்துக்கு வருவோம். சாதாரண விசாரிப்புகளுக்கு பிறகு, மோகனிடம் " என்னடா வீட்டுல கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கிறதா சொன்னியே என்னாச்சு" என்றேன். சோகமான குரலில் பதில் வந்தது, " அத ஏன் மாப்புள கேட்குற, ஒரு ஜோசியக்காரன் இடையில புகுந்து, இப்போ நேரம் சரியில்லைன்னு சொல்லி காரியத்த கெடுத்துட்டான்" என்றான். "இந்த காலத்துலயுமா இப்படி நடக்குது, சரி என்ன பண்ணப்போற" என்றேன் . " வேற என்ன செய்யுறது, அடுத்த மாசம் ஊருக்கு போய் அந்த ஜோசியக்காரனுக்கு ஏதாவது பணம் குடுத்து அவன் வாயை அடைக்கனும். இங்க குளிர் தாங்கமுடியல மாப்புள " என்று கொட்டினான் அவன் வேதனையை.

"சரி , உனக்கு என்னாச்சு, வீட்டுல ரொம்ப கட்டாயப்படுத்துறதா சொன்னீயே, ரெடியாயிடுச்சா" என்று தன் பங்குக்கு என் சோகத்தை கிளறினான் இன்னொரு நண்பன் சீனு. " ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, போன் மேல போன் போட்டு கல்யாணம் பண்ணனும்னு டார்ச்சர் பண்ணினாங்க. எல்லாரும் போல நானும் எனக்கு இப்ப என்ன அவசரம், நான் அத பண்ணனும், இத பண்ணனும் அப்புடின்னு கொஞ்சம் ஃபிகு பண்ணீட்டேன். அவ்வள்வுதான் அதுக்கப்புறம் கண்டுக்கவே மாட்டேன்றாங்க.. நானும் சாப்பாடு சரியில்ல, உடம்பு வீணாப்போகுது அப்புடி, இப்புடின்னு என்னென்னமோ சொல்லிப்பாக்கிறேன். ம்கூம்.. காதுலையே வாங்கமாட்டேன்றாங்க.. "

"அதனாலதான் சொல்றேன், மக்களே! வீட்டுல ஏதாவது கல்யாண பேச்சு எடுத்தாங்கன்னா , உடனே ok சொல்லிடுங்க, கொஞ்சம் ஃபிகு பண்ணினா, அவ்வளவுதான், கெஞ்ச வச்சுருவானுங்க.." எங்கள் கதை இப்படியிருக்க, இன்னொரு நண்பன் , " உங்க வீடாவது பரவாயில்ல, எங்க வீட்டுல இத பத்தி பேசவே மாட்டேன்றாங்க.. எங்க அப்பாவுக்கு நானே மொட்ட கடுதாசி போடப்போறேன், உங்க பையன் இங்க ஒரு பொண்ணுகூட சுத்துறான்னு.. அப்பவாவது ஏதாவது ரியாக்சன் இருக்கான்னு பார்ப்போம்." என்று இப்படி அலுத்துக்கொண்டான்

"கூட படிச்ச பொண்ணுங்க எல்லாம் அவுங்க பசங்களோட LKG அட்மிஷனுக்கு Interview attend பண்ணுதுங்க, முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுட்டுது , இன்னும் நமக்கொரு முடிவு கிடைக்கல" என்று பெருமூச்சோடு பேசி முடித்தோம்.

யோசிச்சு பார்த்ததுல, கல்யாணம் பண்றதுனால முக்கியமான பெனிஃபிட் என்னென்னா, Missed call குடுத்து கடன் கேட்டு நச்சரிக்கிற பேர்வழிகளிடம், பேஃம்லி ஆயிட்டேன் மாப்புள, ரொம்ப சாரி ன்னு சொல்லி எஸ்கெப் ஆயிடலாம்.
என்ன சரிதானே!...

Sunday, September 28, 2008

அவ்வளவு நல்லவரா நீங்க??

அலுவலகத் தோழர் ஒருவருக்கு ஜீன் மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சில நாட்கள் கழித்து, எங்கள் அலுவலகத்துக்கு வழக்கமான, வருடாந்தர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவக்குழு ஒன்று வந்தது. இரத்தம் முதல் இதயம் வரை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.
சென்ற வருடம் போலவே இந்த வருடமும், எல்லோருடைய சோதனைமுடிவுகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆம் எல்லாருக்கும் கொழுப்பு ஏறி இருந்தது. "கொலஸ்ட்ரால கன்ட்ரோல் பண்றதுக்கு, எக்சசைஸ் பண்ணுங்க, பழங்கள் நிறைய சாப்பிடுங்க, எண்ணைப் பலகாரங்கள் சாப்பிடாதீங்க" அப்டின்னு டாக்டர்கிட்டயிருந்து ஏகப்பட்ட அட்வைஸ்.

பெரும்பாலானோர் தலைய ஆட்டிட்டு ஜாலியா வந்துட்டோம். ஆனா அந்த கல்யாண மாப்பிள்ளை மட்டும் ரொம்ப கவலையா இருந்தாரு. ஏன்யா என்னாச்சுன்னு விசாரிச்ச்ப்போ, சுகர் லெவல் பார்டரில் இருப்பதாகவும், கவனமாக இருக்கவேண்டும் என்று டாக்டர் சொன்னதாக சொன்னார்.

அவருடைய ரிப்போர்ட்டை பார்த்தபோது , எல்லாம் நார்மலாகவே இருந்தது. சர்க்கரை அளவு மட்டும் சற்று அதிகமாக இருந்தது. எறக்குறைய எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது. "அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. சாப்பாடு, தூக்கம் இதெல்லாம் சரி இல்லாததால இந்தமாதிரிதான் இருக்கும், கல்யாணமான எல்லாம் சரியாய் போயிடும்" என்று எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தோம். ஆனால் அவர் ஒன்றும் கேட்பதாயில்லை.

" நான் வீட்டுக்கு போன் பண்ணி கல்யாணத்த வேண்டாம்னு சொல்லிரேன். பாவம் அந்த பொண்ணு, அதோட வாழ்க்கையும் வீணாபோயிரும் " அப்புடின்னு வாழ்வே மாயம் கமல் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டார். அன்று இரவே அவருடைய பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் முதலில் சற்று அதிர்ந்தாலும், சுதாரித்துக்கொண்ட அவருடைய அப்பா, உடனே கிளம்பி வருவதாகவும், மனதை குழப்பிக்கொள்ள வேண்டாமென்றும் ஆறுதல் சொல்லிவிட்டு, அடுத்தநாள் இங்கு வந்து சேர்ந்தார்.

மாப்பிள்ளை இன்னும் சோகத்தில்தான் இருந்தார். அவருடைய அப்பா வந்து சில விவரங்களை சொன்னார்," இதோ பாருப்பா, நம்ம வீட்டுல எனக்கோ, உங்க அம்மாவுக்கோ சுகர் கிடையாது. அதுனால ஜீன் வழியா உனக்கு வர்த்துக்கு வாய்ப்பில்லை. உனக்கு சர்க்கரையளவு இப்போ பார்டரில்தான் இருக்கு. அதனால் இது ஒரு எச்சரிக்கைதான். இனிமே எக்சசைஸ், யோகா இதெல்லாம் பண்ணி, ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டா ஒரு பிரச்சினையும் இருக்காது." இதன்பிறகே அவருடைய முகத்தில் சற்று தெளிவு பிறந்தது.
அன்று சாயங்காலமே அவர் போய் யோகா கிளாஸில் சேர்ந்தார். காலையில் வாக்கிங், ரன்னிங், சாயங்காலம் யோகா அப்புடின்னு பயங்கர பிசியாயிட்டாப்புள.. சோறு, சோறுன்னு அலையாம, சப்பாத்தி, ஓட்ஸ் ன்னு பயங்கர மார்டனா மாறிட்டாரு.
மூன்று மாதத்தில 6 கிலோ எடையை குறைச்சி, இப்போ நல்லா சுறுசுறுப்பாயிட்டாரு. எப்புடி இருந்த மோகன் இப்படி ஆயிட்டாரே? ன்னு நாங்க ஆச்சர்யமா பார்க்கிறோம். அக்டோபர் மாதம் அவருக்கு திருமண நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. இப்பவெல்லாம், மணமகனும், மணமகளும் செல்பேசியில் குறைந்தது 1 மணி நேரமாவது பேசுகிறார்கள்.. நல்லாயிருங்க மணமக்களே......

அவரிடம் நாங்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி..... அவ்வளவு நல்லவரா நீங்க???

Wednesday, September 24, 2008

வாழ்த்துக்கள்

வலையுலகத்திற்கு என் அன்பான வணக்கங்கள். காணமல் போன பேனாவை கண்டுபிடிப்பதற்குள் மூன்று மாதங்கள் கரைந்துவிட்டன. இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகள். அதில் முக்கியமானது,
செப்டம்பர் 11 அன்று பங்குச்சந்தை நிபுனரான திரு.மங்களூர் சிவா, பூங்கொடி என்ற நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் தன்வசமாக்கிக்கொண்டார். வாழ்த்துக்கள் சிவா சார்.
தனியா இருந்த போது ஊர், ஊரா போய், வேண்டியவங்க, வேண்டாதவங்கன்னு பாரப்ட்சம் பார்க்காமல், பஜ்ஜியும், சொஜ்ஜியும் தின்னுட்டு வந்த நீங்க, அதேமாதிரி இனிமே எங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பீங்கன்னு நம்புகிறேன்.

நீங்க காலை, மதியம் மற்றும் இரவு வேலைகளில் மட்டும் சமைப்பதாகவும், சமையல் மணம் சுற்றியுள்ள தெருக்களில் பரவுவதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.. உண்மையா சிவா சார்...

உங்கள் இருவரின் இல்லறமும் சிறக்க மீண்டும் என் நல்வாழ்த்துக்கள்....


Sunday, June 1, 2008

சின்ன விஷயம் ஆனா பெரிய சந்தோஷம்..

இரவு நேரத்தில் பேருந்தின் முன்னிருக்கைகளில் அமர்ந்து, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அடிமனதில் ஒரு சிறிய பயம் இருக்கும். கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தோடு வேகமாய் எதிர்வரும் வாகனங்கள், குறைந்த இடைவெளியில் கடந்துபோகும் மகிழ்வுந்துகள், வளைவுகளில் முந்திச்செல்லும் இருச்சக்கரங்கள் என இவையேல்லாம் ஒன்றுசேர்ந்து லேசான பயத்தை உண்டாக்கிவிடும். அந்த சமயங்களில் ஓட்டுநரைப்பற்றி அதிகம் சிந்திப்பதுண்டு. காலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனா ஏனோ இன்றுவரை யாருக்கும் சொன்னதில்லை.




அன்று, வேளை நகரிலிருந்து , திருவனந்தபுரம் நோக்கி பேருந்தில் என் பயணத்தை தோடங்கினேன். மே மாதம் என்பதால் பேருந்து நிரம்பியிருந்தது. இரவு 2 மணியளவில் பேருந்தின் பின்பக்கம் பெரிய சத்தம் கேட்டது. கண்களை திறப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு தூக்கத்தை கலைத்தேன். "பஞ்சர்" என்றார் டிரைவர். சற்றுத்தொலைவில் ஒரு மெக்கானிக் ஷாப் இருப்பதாக ஒரு லாரி டிரைவர் சொன்னார். எல்லாரையும் இறக்கிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு போனார்கள்.

விளக்கு எரிந்துகொண்டிருந்தாலும் , கடையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். "காசு கம்மியா கிடைக்கும் ங்குறதால அரசாங்க பஸ்சுக்கெல்லாம் பஞ்சர் ஒட்ட மாட்டார்கள். வேற பஸ் பாக்க வேண்டியதுதான்" என்று சலித்துக்கொண்டார் சகபயணி ஒருவர். குரல்கேட்டு இருவர் எழுந்தனர். டிரைவர் விஷயத்தை சொன்னதும் உடனே உள்ளே சென்று ஜாக்கி யை எடுத்துக்கொண்டு வந்தனர். கிடுகிடுவென வேலையை ஆரம்பித்தார்கள். ஸ்டெப்னி டயரைப் பார்த்தபோது வழுவழுவென டைல்ஸ் தரை மாதிரி இருந்தது. ஒரு நாற்பது நிமிடங்களில் வேலையை
முடித்துவிட்டனர்.


அப்பாடா என்று பெருமூச்சுவிட்டபடி எல்லோரும் அடித்து பிடித்து பெருந்தில் ஏறினோம். என் அருகில் அமர்ந்திருந்தவர் மட்டும் ஏறவில்லை. அவர் அந்த மெக்கானிக்குகளுடன் பேசிக்கொண்டிருந்தார். கடைசியில் அந்த இருவரின் சட்டைப்பையிலும் ஏதோ ஒரு சிறியத்தோகையை திணித்துவிட்டு, கைகுலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் அழுக்காய் இருந்ததால் அவர்கள் தயங்கினர் , விடாமல் இவர் கைகுலுக்கிவிட்டு வண்டியில் ஏறினார். அவர்களும் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்.


அருகில் அமர்ந்தபிறகு கையில் ஒட்டியிருந்த மசையை ஜன்னல் வழியாக கழுவினார். நான் ஆச்சர்யமுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவராகவே பேச ஆரம்பித்தார், " அது ஒன்னுமில்ல தம்பி, இந்த ராத்திரி நேரத்துல ரொம்ப கஷ்டப்பட்டு பஞ்சர் ஒட்டினாங்க. அவுங்க மட்டும் இல்லைனா நம்ம நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும். அதுனாலதான் அவுங்களுக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன்" என்றார். "ச்சே.. நம்மகூட ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாமே" என்று நினைத்துக்கொண்டேன்.


இடையில் ஒருமணிநேரம் தடைப்பட்டாலும் சரியான நேரத்திற்கு நாகர்கோவில் வந்து சேர்ந்தது பேருந்து. எல்லோரும் கீழே இறங்கிகொண்டிருந்தோம். என் அருகில் அமர்ந்திருந்தவ்ர் இறங்குவதற்கு முன், என்னிடம் விடைப்பெற்றுக்கொண்டு ஓட்டுநரிடம் சென்றார். ஓட்டுநருக்கு கைகொடுத்து, பத்திரமாய் கொண்டுவந்து சேர்த்ததற்காக நன்றி தெரிவித்தார். அவருக்கு பின் இறங்கிய நான் சொல்லலாமா என்று யோசித்தப்படியே நடக்கத் தொடங்கினேன். ஆனால் சொல்லவில்லை சற்றுதூரம் சென்று பின் மீண்டும் திரும்பி வந்து அந்த ஒட்டுநருக்கு நன்றி தெரிவித்தேன். அவரும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். என் அருகில் அமர்ந்து பயணித்தவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் அதற்குள் அவர் கூட்டத்தில் கலந்து காணாமல் போயிருந்தார்.


பின்குறிப்பு: "சரியான ரம்பம்" அப்புடின்னு நீங்க திட்றது என் காதுல விழுது. மேட்டர் என்னன்னா , நல்ல விஷயங்கள பார்க்கும்போது வாய்திறந்து பாராட்டுங்க. அவ்வளவுதான்..... ..

Friday, May 16, 2008

இணைய இல்லறம்

"எப்போ பாத்தாலும் உங்க அப்பா, அம்மா வுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணாதீங்க. நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க"
******************
"கேட்குறீங்க இல்லன்னு சொல்லலை. ஆனா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்ருவீங்க. சம்பளத்தை உங்க அப்பாகிட்ட குடுத்துரீங்க. அதை நான் தப்புன்னு சொல்லலை. ஆனா, நம்ம குழந்தைக்கு ஒரு பால் டப்பா வாங்கனும்னா கூட உங்க அப்பாகிட்டதான் கையேந்த வேண்டியிருக்கு".
******************
"ம்ம். குடுக்குறாரு ஆனா அதுக்குமுன்னாடி ஏன், எதுக்குன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறாரு. சிக்கனமா இருக்க வேண்டியதுதான், ஆனா உங்க அப்பா பண்றது கஞ்சத்தனம்".
***********************
"வயசானவங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, இதையே எத்தனைதடவைதான் சொல்லுவீங்க. என்னோட பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு".
*********************
"நான் ஏன் எங்க அப்பா வீட்டுக்கு போகனும்? , அவுங்க நிம்மதியை கெடுக்கவா?.. என்ன பேச்சு பேசுரீங்க நீங்க?. அப்புறம் என்னத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்டீங்க?"
*********************
"ஆமாங்க நான் பேசுறதெல்லாம் உங்களுக்கு சத்தம் போடுறது மாதிரிதான் இருக்கும். குழந்தைக்காக பாத்துகிட்டுருந்த வேலையையும் விட சொன்னீங்க. இப்ப வீட்டு வேலையையும் பாக்கணும், குழந்தையையும் கவனிக்கனும்னா ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலைக்கு ஒரு ஆளு வைச்சுக்கலாம்னு சொன்னாகூட உங்க அப்பா காதுலையே வாங்கமாட்டேங்குறாரு"
*********************
"ஐயோ! சொல்றத புரிஞ்சுக்குங்க. வேலை செய்யுறத்துக்கு நான் அலுப்பு படலைங்க. குழந்தை தவழ ஆரம்பிச்சுட்டான். ஒவ்வொரு நொடியும் அவனை கவனிச்சுகிட்டே இருக்க வேண்டியிருக்கு. துணி எக்கச்சக்கமா துவைக்க வேண்டியிருக்கு, ஒரு ஆளு துணைக்கு இருந்தா உதவியா இருக்கும்".
*******************
இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?.. நான் பைத்தியம் மாதிரி கத்திகிட்டு இருக்கேன். ஏதாவது பேசுங்க".
*********************
"என்ன செய்யுறதுன்னா?... ஒன்னு நீங்க இங்க வந்து எங்ககூட இருங்க. இல்லைன்னா என்னையும் , குழந்தையையும் உங்ககூட கூட்டிட்டு போயிடுங்க. சரி நேரமாயிடுச்சி குழந்தை முழிச்சுடுவான், போய் சாப்பிட்டு , நல்லா தூங்குங்க, நான் கிளம்புறேன்". என்று வெளிநாட்டில் இருக்கும் கணவனிடம் வெடித்துவிட்டு , Yahoo Messenger ஐ sign out செய்துவிட்டு கிளம்பினார் அந்த இணைய இல்லறத்தின் இல்லத்தரசி.

Friday, April 25, 2008

Inflation னும் உளுந்து வடையும்..

அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கீறீர்களா?... அம்மாவாசைக்கும் , அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ , உளுந்துவடைக்கும் பணவீக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு. அட ஆமாங்க... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க மேற்கொண்டு படிங்க...

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக விஷயம் தொடர்பாக சென்னைக்கு இரயிலில் புறப்பட்டேன். கேரளாவில் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு விடைகளை சரிபார்க்கும் மாணவி, அவருடைய தந்தை, சென்னையில் இருக்கும் பிள்ளைகளைப்பற்றி சத்தமாய் பெருமை பேசிக்கொள்ளும் இரு வயதான நண்பர்கள், RAC யை Confirm செய்ய டிடியாரை எதிர்பார்த்திருக்கும் தம்பதியர், விடுமுறைக்காக சுற்றுலாச்செல்லும் குழந்தைகள் என பெட்டி முழுவதும் சுவாரசியங்கள் நிறைந்திருந்தன.

நாகர்கோயில் தாண்டியதும் ஒருவர் வடை, சமோசா போன்ற திண்பண்டங்களை சுமந்து வந்தார். கொஞ்சம் சூடாக இருந்ததால் எல்லாருமே வாங்கினார்கள். வயதான பெரியவர்களில் ஒருவர் , விற்பவரைப்பார்த்து " என்னப்பா வடை ரொம்ப சின்னதா இருக்கு, இதைப்போய் 2 ரூபாய் என்கிறாயே?" என்று ஆரம்பித்து வைத்தார். உடனே வாங்கிய அனைவரும் அதே புகாரை எழுப்பினார்கள். உண்மையிலேயே வடை சிரியதாகத்தான் இருந்தது.

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு அந்த வியாபாரி " சார், உளுந்து 150 ரூபாய் விக்குது, எண்ணை எக்கச்சக்கமா ஏறி கெடக்குது, விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு. நானும் விலையை ஏத்தி விக்கலாம். ஆனா யாரும் வாங்க மாட்டாங்க.. அதனாலதான் சைஸ கொஞ்சம் கம்மி பண்ணீட்டேன்.. நாட்டோட நிலைமை அப்புடி சார்.." என்று விளக்கமளித்தப்படி பக்கத்து பெட்டிக்கு நகர்ந்தார்.
ஐயா பொருளாதார மேதைகளே ... ...எதாவது சீக்கிரம் பண்ணுங்க.. நிம்மதியா ஒரு வடை கூட வாங்கமுடியல...


Saturday, April 19, 2008

உன்னையெல்லாம் திருத்தமுடியாது...

கபில்தேவோட ICL க்கு போட்டியா, இந்திய கிரிக்கெட் வாரியம் IPL ன்னு பங்காளி சண்டையை ஆரம்பிச்சபோது அது ஒரு பெரிய விஷயமா தெரியல. ஆனா பெரிய பணக்காரர்களிடம் டீம்களை விற்று, விளையாடுபவர்களை ஏலம் விட்டபோது இது விளையாட்டல்ல , வியாபாரம் என்று புரிந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும், ரட்சகன் படத்துல நாகார்ஜுனுக்கு நரம்பு புடைக்குமே , அதுமாதிரி என்க்கும் என் நண்பர்களுக்கும் உடம்பெல்லாம் நரம்பு புடைத்தது. நாமெல்லாம் வாயை திறந்துகிட்டு டிவி பார்க்கிறதுனாலதான் இவங்கல்லாம் இப்படி பண்றாங்க என்று கொதித்தார் ஒரு நண்பர். IPL மேட்ச நாம யாரும் பார்க்ககூடாதுன்னு பேசி முடிவு பண்ணினோம். கிட்டத்தட்ட சபதம்ன்னு வச்சுக்கலாம்.

நாட்கள் ந....க.....ர்....ந்....த....ன. ஏப்ரல் 18 மாலை 6 மணிக்கெல்லாம் எல்லாரும் டிவி ரூமுக்கு வந்தாச்சு. "செம கலர்ஃபுல்லா இருக்குல்ல" இது ஒரு நண்பர். "என்ன கூட்டம் பார்த்தீங்களா" இது நான். " மேட்சு எப்போ ஆரம்பிக்கும் " இது கொதித்து எழுந்தவர். இப்படி நாங்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது , பின்புறத்திலிருந்து யாரோ என் தலையில் குட்டினார்கள். திரும்பிப்பார்ததால் சாட்சாத் என் மனசாட்சியேதான்.. உன்னையேல்லாம் திருத்தமுடியாது என்று மீண்டும் நறுக்கென்று என் தலையில் குட்டிவிட்டு அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கத்தொடங்கியது என் மனசாட்சி...