Sunday, January 20, 2008

தயக்கம்

"வாங்க வாங்க" என்று சிவாவை புன்னகையுடன் வரவேற்றாள் மலர்.

"அப்பா குளிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உட்காருங்க" என்று நாற்காலியை நகர்த்திக்கொடுத்தாள். இருவரும் அவரவர் வேலைகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
"ஒரு நிமிஷம். நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மலர்.
குளித்துவிட்டு வந்த கணேசன், "என்ன சொல்லிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தார்.
"இன்னும் சொல்லல சார். இந்தாங்க இந்த மாத வாடகை " என்று நீட்டீனான்.

"ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. எப்போதான் சொல்லப்போறீங்க?"என்று கோபப்பட,
"ஏம்பா அவரை திட்ரீங்க" என்று சப்போட்டுக்கு வந்தாள் மலர்.

"அது ஒன்னுமில்லைமா எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன டிலீங் இருக்கு அதபத்திதான் கேட்டுக்கிட்டு இருந்தேன்" என்று சாமாளித்தார் கணேசன்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான் சிவா.

"நேர்ல முடியலைன்னா போன்லையாவது சொல்லித்தொலைங்க" என்று அலுத்துக்கொண்டார் கணேசன்.

சமையலறையிலிருந்து மனைவி கமலா அழைக்க , உள்ளே சென்றார் கணேசன்.

"என்னங்க சொல்லிட்டாராமா?" என்று ஆவலுடன் கேட்டார்.

"ஆமா மண்ணாங்கட்டி" சூடானார் கணேசன்.

"ஏன் இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு கொஞ்சம் தயக்கம் அதிகம்" இது கமலாவின் சமாதானம்.

"பின்ன என்னடி, நம்ம பொண்ண லவ் பண்றேன்னு நம்மகிட்ட சொல்லியே 6 மாசம் ஆகிடுச்சு. நம்மளும் சரின்னு சொல்லிட்டோம், அவுங்க வீட்டுலயும் சரின்னுட்டாங்க. ஆனாலும் நான்தான் என் காதல மலர்கிட்ட சொல்லுவேன்னு அடம்பிடிச்சவரு, இன்னும் சொல்லாம காலத்த கடத்தினா நாம என்னதான் பண்றது".

"சரி சரி விடுங்க. நீங்ககூடதான் ரெண்டு வருஷம் என்கிட்ட சொல்ரத்துக்கு பயந்தீங்க. ." என்று கமலா சிரிக்க , கணேசனுக்கு வெட்கம் படர்ந்தது முகத்தில்.